காதலர் தினம், கலாசாரம், காசு, கங்கணா
பெப்ரவரி 15, 2009
காதலர் தினம் நன்றாக கொண்டாடியாச்சா? (கங்காஸ்னானம் ஆச்சா என்பது பழமொழி. இதுவே புதுமொழி)
காதலர் தினம் காலையில் பேப்பரைக் கையில் எடுத்ததும் பேப்பர் மேல் முழு பக்கத்தில் வேலன்டைன் வாழ்த்துக்களுடன் பிபாஸா. மார்பை அரைகுறையாய் மூடி / திறந்து அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள். உள்ளை புரட்டியதும் ரோஸ் ரோஸ் கலர்களில் ஏகத்துக்கு விளம்பரங்கள். பெரிச்சாய்
பிங்க் கலர் ஆண்டின் வரைந்து அதன் உள்ளே ஜோதிஷ் மகராஜ் ஒருத்தரின் விளம்பரம் - know your love life through astrology என்று போட்டிருந்தது. போச்சுடா!! நான் எப்போதும் கேட்கும் எப்போதும் அழுது வடியும் ஏ.ஐ.ஆர்.கோல்ட் எப் எம் கூட காலங்கார்த்தாலை ஏழரை மணிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் சொன்னதோடு “ப்யார் கியா தோ டர்னா கியா” என்று பாட்டை வேறு போட்டுவிட்டார்கள். சந்தேகமேயில்லை, காதலர் தின ஜூரம் எல்லோருக்கும் தலைக்கேறித்தான் விட்டது.
இன்றைய சமுதாயத்தில் காதலுக்கு விரோதமாகவோ, கேலியாகவோ பேசினால் அது நம்மை தலிபான் என்று நாமே சர்டிபிகேட் கொடுத்துக்கொள்ளும் ஒரு குற்றம்!!
ஆபிஸில் நுழையும்போதே ரெண்டு பெண்கள் - டிரெயினிகள் – குறும்பாக என்னைப்பார்த்து ஹேப்பி வாலன்டின் டே என்று சொல்லிச் சிரித்தார்கள். எனக்கு வேண்டியதா இது! இன்று சிகப்பு நிறத்தில் டிரஸ்
போட்டுக்கொண்டிருந்தால் விவகாரம் என்று அர்த்தமாம். நல்ல வேளை, நான் தப்பித்தேன்.
காதலர் தினம் என்பது சில கிறுக்குத்தனங்களுடன் வியாபாரிகளால் ஏகபோகமாக வளர்க்கப்படுகிறது. இளைஞர், இளைஞிகளுக்கு பெரும்பாலும் இது ஒரு விளையாட்டான வேளை. அவர்கள் பிற வயசான கேஸ்கள் மாதிரி கலாசாரம், காசுசெலவு என்றெல்லாம் யோசிக்காமல் இதற்கு சிரித்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
இதனால் லவ் மேட்டர்கள் அதிகமாய் ஆகி விடுகிறதா என்றால் அது முடிவு செய்யாத, யோசிக்கவேண்டிய விஷயம். பெற்றோர்களுக்கும், சிடுமூஞ்சிகளுக்கும் பிடிக்காது என்பதாலேயே இது இளைஞர்களுக்கு ஒரு திரில். ஒரு ஏழெட்டு வருஷ கால இடைவெளியில் வளரும் விடலைப்பருவத்தில் நடக்கும் எத்தனையோ அபத்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு புது அபத்தம். (அப்படி ஒன்றும் புத்தம்புதுசு அல்ல. எனக்குத்தெரிந்து இருபது வருசமாக எல்லோர் வையலையும் வாங்கிக்கொண்டு காதலர் தினம் அழகாய் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது…)
இந்த அபத்தத்தையும் விளையாடிவிட்டு சமத்தாக செட்டில் ஆகும் பலர் – பெரும்பான்மையினர் இவர்கள்தான் – புத்திசாலிகள். ஆனால், இந்த விளையாட்டை சீரியஸாக்கிக்கொண்டு, அதனால் தன் வாழ்க்கையை விளையாட்டாய் சீரியஸாக்கிக்கொண்ட சின்ன எண்ணிக்கைகள் நிஜமாக பரிதாபப்படவேண்டியவர்கள். இந்த காதலர் தினத்தின் பலிகடாக்கள் அவர்கள். எல்லா ஹைப்பிலும் இந்த எதிர்விளைவு இருக்கத்தான் செய்கிறது.
இந்த கொண்டாட்டம் நம் கலாசாரத்துக்கு விரோதமா என்றால் ஆமாம், நிச்சயமாக. கலாசாரம் என்பது கல்லில் செதுக்கப்பட்டு கெஸட்டில் போடப்பட்ட வரைமுறை அல்ல. அது மாறிக்கொண்டே இருக்கும் ஒரு உயிருள்ள பிராணி - ஆனால் மெதுவாக, நிதானமாக, தலைமுறைகளாக தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு சோம்பேறி. அதனால்தான், கலாசாரக் காவலர்களாய் தங்களை பாவித்துக்கொண்டு காவித்துண்டும், கட்டாந்தடியுமாய் அலையும் சேனைகளாகட்டும், கஜூராகோ, கந்த புராணம், இந்திரவிழா என்றெல்லாம் காதலுக்கு நம் கடந்தகாலத்தில் சப்போர்ட் தேடும் புது ஆராய்ச்சிகளர்கள் ஆகட்டும் - இரண்டு பேர்களுமே உண்மையை அவர்கள் சௌகர்யத்திற்கு திரிக்கிறார்கள்.
இன்றைய கலாசாரம் என்பது இன்றைய பெரும்பான்மை மக்களின் வேல்யூ, கருத்துக்கள், நடவடிக்கைகளால் நிர்ணயிக்கப்படுகிறது. Culture is what society does. கலாசாரம், சமுதாய இமேஜ் இவற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கும் மிடில் கிளாஸ் இந்தியா இன்று இன்னும் இந்த அபத்தத்தை தன்னகப்படுத்திக்கொள்ளவில்லை என்பதால் இந்த வேலன்டைன் டே வேண்டாத டே ஆகிப்போகிறது. வேறு எதனாலும் அல்ல. நாளை நிலைமை மாறினால் இதுவே கலாசாரமாய் ஆகிப்போகும், சந்தேகமில்லை.
நான் மேலே சொன்னவர்களில் முதல்வகையை (ராமசேனை வகையறாக்கள்) எல்லோரும் நன்றாக வைதாகிவிட்டது. இரண்டாம் வகைகளில் ஒரு நமூனா நம் டாலர் செல்வன். அவர் காதலுக்கு மரியாதை என்று ஆனைமுகனைக் கூப்பிடுகிறார். ஆனைமுகன் மட்டும் என்ன, அவன் அப்பன் ஆயி கூட காதல் திருமணம்தான். சொல்லப்போனால், எல்லா சாமிகளுமே காதல் திருமணம்தான். இராமன் மட்டும்தான் வேறுமாதிரி கதைக்கப்பட்டாலும், அதையும் நம் கம்பநாடார் “அண்ணலும் நோக்கினான்..” ஆக்கிவிட்டார். அதனால் காதல் ஓக்கே ஆகிவிடுமா என்ன?
“எங்கள் ஆராய்ச்சியில் இராமாயண காலத்தில் பெண்கள் மார்கச்சை போடாமல் இருந்ததாகத்தான் தெரியவந்தது. என் சீரியல் அதிகாரபூர்வமாக அமைய ஆசைப்பட்டாலும் சில சம்பிரதாயங்களில் இன்றைய பழக்கங்களே இந்திய கலாசாரம் என்று வரையறுக்க வேண்டியிருக்கிறது” ராமாயண சீரியல் வந்துகொண்டிருந்த காலத்தில் ஒரு பேட்டியில் ராமானந்த சாகர் சொன்னது இது.
அதனால், இந்து கலாசாரம் என்பது இன்றைய இந்தியர்களின் கலாசாரமே ஒழிய வேறல்ல. முஸ்லிம்களால் பழக்கப்படுத்தப்பட்டு முக்காடு போட்டு கோயிலுக்குப்போகும் இந்து மேற்குடிப்பெண்களிடம் முக்காடை நாம் கழட்டச்சொல்ல முடியுமா என்ன?
சொல்லப்போனால், ஒரிஜினல் இந்து மத சம்பிரதாயமே சுய விருப்ப திருமணம்தான். வைதீக திருமணத்தில் மாப்பிள்ளை படிப்பை முடித்து தானாகப்போய் பெண்ணைப்பார்த்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவதாகத்தான் இருக்கிறது. இன்றைய கல்யாணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் எல்லாம் கூட அப்படித்தான் பாடுகின்றன. அங்கே மாப்பிள்ளையின் அப்பா, அம்மாவிற்கு பட்டுப்புடவை, வேட்டி கட்டிக்கொண்டு வீடியோவில் நிற்பதைத்தவிர வேறு வேலை இல்லை.
மேற்சொன்ன பத்தியில் “படிப்பை முடித்து” என்பது செயல்வார்த்தை (operating word). அதுதான் உண்மையான காதலுக்கு இலக்கணம். தன்னை எல்லாவிதத்திலும் தகுதியாக்கிக்கொண்டு பின்னர் இல்லறத்தில், குறிப்பிட்ட லட்சியம், நிபந்தனைகளோடு இணைவது. கல்யாண மந்திரங்களில் இந்த நிபந்தனைகளையும், எதற்காக உன்னைக் கட்டுகிறேன் என்ற லட்சியமும் விவரமாய் காணலாம்.
இதனாலேயே, இப்போதைய காதலுக்கும் நாம் புராணங்களில் காணும் காதலுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். இந்த இலக்கணங்களை மீறுவதினாலேயே, இந்த மல்டிபிளக்ஸ், மெரினா காதல்கள் இந்த லட்சியகாதல்களோடு எதிர்மறையாய் இருக்கின்றன.
காற்றினால் உத்சாகப்படுத்தப்பட்டு வளரும் காட்டுத்தீ விளக்கில் சின்னதாய் இருக்கும்போது அதே காற்றால் அணைக்கப்படுவதில்லையா, அதுபோல இந்த லவ்சுகள் ஆழம், இலக்கு, நிபந்தனைகள் இல்லாததால், வேகமான வேட்கையில் வாழ்க்கையை அழித்துவிடுகின்றன.
இந்த காதல்கள் வெறும் காசையும், அழகையும் பார்த்து ஹார்மோன் வேகத்தில் ஹாய்யாய் சுற்ற மட்டும் உபயோகப்படுவதால் பின்னால் வாழ்க்கை என்னும் வழுக்கு மரத்தில் வீழ்ந்துவிடுகின்றன.
காதல் செய்யுங்கள், செய்ய வேண்டும். ஆனால், காலத்தில் செய்யுங்கள். இன்று நூத்துக்கு எண்பது காதல்கள் காலத்தால் முந்தி பிஞ்சில் பழுத்துவிடுகின்றன. இதுவே பிராப்ளம். இதுவே பிரச்சனை. காதல் அல்ல.
பிடிக்காவிட்டால் பின்னால் கழட்டிவிட்டுக்கலாம் என்ற தைரியத்தில் தொடரும் காதல்கள் காதல்கள் அல்ல. இன்றைய பார்வதிகள் சிவனுக்காக பஞ்சாக்னியில் தவமும் கிடைப்பதில்லை, இன்றைய அமராவதிகள் அரண்மனையையும் துறப்பதில்லை.
காதலும், காதலர் தினமும் எதிர்க்கப்படுவது இப்படி கொச்சைப்படுத்தப்பட்ட ஆசையினாலேயே.
இன்றைய இளைஞர்கள் தன் காதலர்களிடம் எதை எதிர்பார்க்க வேண்டும், எதைக் கொண்டாட வேண்டும் என்று தெரியாமலே மினுக்கலுக்கு மயங்கிவிடுகிறார்கள்.
எல்லோரும் அல்ல. பலப்பல நல்ல பிள்ளைகள் அழகாகப்படித்து அழகாக குடித்தனம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்பது நிச்சயமே.
வயசானவர்கள் சின்னவர்களை கேலிசெய்ய இந்த காதலர் தினம் நன்றாக பயன்பட்டாலும் இது பொதுப்படையான இளைஞர்களின் தினம் அல்ல.
இன்றும் மிடில்கிளாஸ் இந்திய இளைஞர், இளைஞிகள் கட்டுப்பட்டித்தனத்துடனே சம்பிரதமாய்தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை. பெரும்பான்மையினருக்கு இதுவே பொருந்தும்.
போன மாசம் தம்பதிகள் பொதுவில் முத்தம் கொடுத்துக்கொள்வது ஆபாசம் இல்லை என்று ஒரு ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதை ஒட்டி ஊடகங்கள் அடித்த கூத்தில் ஒரு பத்திரிக்கையில் இளைஞர், இளைஞிகளிடம் பேட்டி கண்டு போட்டிருந்தார்கள். மிகவும் பெரும்பான்மையான இளைஞர்களும், இளைஞிகளும் இந்த பப்ளிக் முத்தத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்பதை நான் அந்த கருத்துக்களில் கண்டேன். வயசானவர்களுக்கு சங்கடம், நம் கலாசாரத்துக்கு விரோதம் என்றெல்லாம் பல கருத்துக்கள் இளைஞர்களால் சொல்லப்பபட்டன.
நடவடிக்கைகளில் புரட்சி பண்ண நம் இளைஞர்கள் இன்னும் தயங்கியே நடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. நம் மிடில் கிளாஸ் இளைஞர் பட்டாளம் இன்னும் அடக்க ஒடுக்கமாய் பெரும்பாலும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
காதல் என்பது மற்ற உணர்வுகளைப்போலின்றி காதல்செய், செத்து மடி என்ற உணர்வாய் இருந்தது ஒரு காலம். அதுவே நல்ல காதல். ஆனால், இன்றைய காதலோ மொபைல் போன், ஹோம் டெலிவரி பிட்சா மாதிரி யதார்த்த சௌகரியமாய் மாறிப்போய்விட்டதுதான் கொடுமை.
“என் நண்பன் அத்யயனை நான் உயிருக்குயிராய் காதலிக்கிறேன். இரண்டு வருஷமாய் நாங்கள் பிரியாது சேர்ந்திருக்கிறோம். ஆனால், இந்த உறவு அவன் பெற்றோர்களுக்கோ, என் பெற்றோர்களுக்கோ பிடிக்கவில்லை என்றால் குட்பை சொல்லிவிட்டுப் போய்விடுவேன். காதல் வரும், போகும், ஆனால் பெற்றோர்கள் அப்படி அல்ல” என்று போன மாசம் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் (22 வயசு) நடிகை கங்கனா ராணாவத். இன்றைய இளைஞர்களின் காதல் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது இது.
நேற்று சனிக்கிழமை சாயங்காலம் ஆனதால், வார சாமான் வாங்கப் போனேன். பாம்பீச்சின் அந்த அழகிய சாலையை ஒட்டிய நடைபாதைகளில் எப்போதும் குசுகுசுக்கும் பல ஜோடிகளை அன்று காணோம். காசை கரியாக்க எங்காவது போயிருப்பார்கள் போல. ரிலயன்ஸ் பிரஷ்ஷில் என்னோடு இரண்டு பெண்கள் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தார்கள். சுடிதார் போட்டு திவ்யமாக ஒரு பெண். ஆச்சரியமாக இடுப்பு வரை கூந்தல், அதைப்பின்னி அழகாய் வாரியிருந்தாள். இடது பக்க மூக்குத்தியும் மஞ்சள் கலரும் மேற்குடி மராட்டிய பெண் என்று காட்டியது. இன்னொருந்தியோ ஜீன்ஸ் போட்டு காசா மூசா என்று கலைந்த தலை. சட்டையில் மேல் பட்டன் காத்து வாங்கியது. இரண்டு பேரும் போனில் பிசி.
ஜீன்ஸ் காரி இடைவிடாது யாரையோ கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். வேலன்டைன் டே யில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
ஐந்து நிமிடத்தில் அவர்கள் இரண்டு பேரிடமும் எதிர்பார்த்தவர்கள் தேடி வந்தார்கள். சுடிதார்காரியைத்தேடிவந்தவன் அவளோடு சேர்ந்து ஒரு பெரிய சாக்லெட் பெட்டி வாங்கிக்கொண்டு பைக்கில் போனான். குசுகுசு பேச்சும், வேகமாக வெளியேறியதும் காதலர் தின சந்திப்பு என்று தானாகவே தெரிந்தது.
இரண்டாமவளை அழைக்க வந்தவன் கையில் அழகாய் ஒரு பெண் குழந்தை. அவள் ஷாப்பிங் பண்ணிய கறிகாய்களை ஏந்தி குடும்பத்தோடு ஆட்டோவில் கிளம்பினார்கள்.
வழக்கமான குடும்ப சலிப்புகளோடு கிளம்பிய அவள் என் கணிப்பைப் பொய்யாக்கி இருந்தாள்.
பார்த்த பிம்பத்திற்கும் நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
யாரைத்தான் இந்த காதலர் தினம் தாக்குகிறது என்று கணிக்க முடியாமல் நான் புன்னகைத்துக்கொண்டே வீட்டுக்கு நடந்தேன்.
பெப்ரவரி 16, 2009 at 1:16 மு.பகல்
WaW!!!! Excellent article…
பெப்ரவரி 16, 2009 at 4:01 மு.பகல்
ரங்கா சார்,
தேங்க்ஸ். பாராட்டுக்கு நன்றி
பெப்ரவரி 16, 2009 at 4:02 மு.பகல்
அருமையான கருத்துக்கள்!!
இதுவே என்னுடைய கருத்தும்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் நண்பரே!!